0 கருத்துகள்

பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2010

ஏகப்பட்ட உதிரிக்கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் களமிறங்கிய‌ பாராளுமன்ற‌ தேர்தல் ஒருமாதிரியாக முடிவுக்கு வந்திருக்கிறது. வட கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பெரும்பான்மையான மக்கள் தங்கள் ஆணையை வழங்கியிருக்கிறார்கள். ஆகக் கூடியது 14 ஆசனங்களை (போனஸ் உள்ளடங்கலாக)பெறக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. தேர்தலில் போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் ஒரு ஆசனத்தை கூட கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வட கிழக்கில் வாக்களிப்பு வீதம் மிகவும் குறைவாக‌ பதியப்பட்ட தேர்தலாக இது கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 18% ஆன வாக்குகளே பதியப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட விருப்பத்தகாத பிளவுகள் வாக்காளர்களிடையே ஒரு சலிப்பை ஏற்படுத்த தவறவில்லை. அது மட்டுமில்லாமல் இடம்பெயர்ந்து யாழ் மாவட்டத்தில் வாழும் மக்களின் மனநிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் யாழ் மாவட்டத்தில் 18,000 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் உதிரிக் கட்சிகளும் சுயேட்சைகளும் களமிறங்கியதால் வந்த குழப்ப நிலை தான் இதற்கு காரணம் என எண்ணத் தோன்றுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டிருக்காவிட்டால் மேலும் சில ஆசனங்களை பெற்றிருக்கக் கூடும்.

தேர்தல் திருவிழா இனிதே நிறைவடைந்தாலும் அரசு என்ன காரணத்திற்காக பொதுத்தேர்தலுக்கு சென்றதோ அந்த இலக்கை அடைய முடியவில்லை. வட கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமிழக்கச் செய்தல் மற்றும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுதல் ஆகிய இரட்டை இலக்கை அடைய முயன்று தோற்றுப் போயிருக்கிறது. சிங்கள மக்கள் அரசின் கடும் போக்குக்கு ஆதரவளித்துள்ளதுடன் தமிழ் மக்கள் தேசியம், தன்னாட்சி போன்றவற்றை கோரி நிற்கின்றனர். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டதாகவே காணப்படுகிறது.

கிழ‌க்கு மாகாண‌த்தை பொறுத்த‌வ‌ரையில் பிர‌தேச‌வாத‌ம் பேசியோரின் சாய‌ம் வெளுத்துப் போயுள்ள‌து. த‌மிழ் ம‌க்க‌ள் விடுத‌லைப் புலிக‌ளால் ஒரு ஆச‌ன‌த்தை கூட‌ கைப்ப‌ற்ற‌ முடிய‌வில்லை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. கிழ‌க்கு ம‌க்க‌ள் தேசிய‌ம், த‌ன்னாட்சி மீது கொண்ட‌ ப‌ற்றை நிரூபித்திருக்கிறார்க‌ள் என்று சொன்னால் மிகையாகாது. என்ன‌தான் ச‌லுகைக‌ளை வ‌ழ‌ங்கினாலும் உரிமைக‌ளை விட‌ முடியாது என‌ த‌மிழ் ம‌க்க‌ள் உறுதி பூண்டிருக்கிறார்க‌ள் என்ப‌து தெளிவாகிற‌து.

த‌மிழ் ம‌க்க‌ளின் அர‌சிய‌ல் அபிலாசைக‌ளை போட்டி அர‌சிய‌ல் மூல‌ம் வெல்ல‌முடியாது என்ப‌து கட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாறு. ம‌க்க‌ளின் தீர்ப்புக்கு த‌லை வ‌ண‌ங்கி த‌மிழ் தேசிய‌ம் மீது ந‌ம்பிக்கை கொண்ட‌ அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் உள்வாங்கி ப‌ர‌ந்த‌ள‌விலான‌ கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அவ்வ‌மைப்பினூடாக‌ பேச்சுவார்த்தைக‌ளை முன்னெடுத்து த‌மிழ‌ர்க‌ள‌து கோரிக்கைக‌ளை முன்வைக்க‌ வேண்டும் என்ப‌தே அனைவ‌ரின‌தும் அவா.

அகில‌ இல‌ங்கை த‌மிழ் காங்கிர‌ஸ், சிறீகாந்தா, சிவாஜிலிங்க‌ம், த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பு ம‌ற்றும் பொது அமைப்புக‌ளை ஓர‌ணிப்ப‌டுத்த‌ சிவ‌ராம், ந‌டேச‌ன் போன்றோர் இன்று எம் ம‌த்தியில் இல்லை. ஆனால் இந்த‌ ப‌ணியை முன்னெடுப்ப‌து தான் ந‌ம் முன்னால் உள்ள உடனடி அர‌சிய‌ல் ப‌ணியாக‌ இருக்க‌ முடியும்.
read more
0 கருத்துகள்

தமிழர் பொருளாதாரம்

தமிழர் பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாதவாறு வட கிழக்கில் பெரும் பின்னடைவை கண்டிருக்கிறது. போர்நிறுத்த காலத்தில் வன்னியில் விவசாயத்தையும் சிறுகைத்தொழில்களையும் கொண்டு பசி பட்டினியற்ற ஒரு நிலையை உருவாக்க முடிந்திருந்தது. சிலர் போரினால் இடிந்துபோன வீடுகளையும் மீண்டும் கட்டியிருந்தனர். ஆனால் அடுத்த சில வருடங்களுக்குள்ளேயே எல்லாம் கனவாகிப் போகும் என்று யாரும் கற்பனை கூட செய்யவில்லை. போரினால் விலைமதிப்பற்ற உயிர்களை மட்டுமல்ல பெருவாரியான பயந்தரு மரங்கள், கால்நடைகள், விவசாய நிலங்கள் என குறுங்கால மற்றும் நீண்டகால முதலீடுகளை இழந்து எதிர்காலம் கேள்விக்குறியாகிய நிலையில் எம் மக்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம்பிக்கை என்ற ஒன்றையே நம்பி வாழ்ந்து பழகிப்போன நாம், நாளைய உதயம் நமக்கானது என உறுதி கொள்ளவேண்டும். நம் மக்களுக்கான உதவியை நிறுவனப்படுத்தி செய்யக்கூடிய சூழ்நிலை தாயகத்தில் இல்லாத காரணத்தினால் தாயக உறவுகளுக்கூடாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு சிறு அளவிலேனும் உதவ நாம் அனைவரும் முன் வர வேண்டும்.

க‌ல்வி ஒன்றே ந‌ம‌து எதிர்கால‌ சமுதாய‌த்தை வ‌ள‌மாக்கும். த‌மிழ‌ர் நாம் எமது ஜனநாயக‌ போராட்ட‌த்தை தொட‌ர்ந்து முன்னெடுப்ப‌த‌ற்கு வ‌ள‌மான எதிர்கால‌ ச‌முதாய‌ம் இன்றிய‌மையாத‌து.
read more
0 கருத்துகள்

தமிழர் முன் உள்ள சவால்...

மீண்டும் ஒரு தேர்தல் தமிழ் மக்களிடையே திணிக்கப்பட்டு இருக்கிறது. இன்று இருநூறுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள். இதில் முக்கியமாக மூன்று பிரிவுகளாக உடைந்து போன தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டு போட்டியிடும் அதேவேளை அரசாங்க தரப்பு வெற்றிலைச்சின்னத்தில் ஈ.பி.டி.பி சகிதம் வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டு தமிழ் வாக்குகளை சூறையாட முயற்ச்சிக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் எப்பொழுது இலங்கையில் புலி பாசிசம் ஒழிகின்றதோ அன்றே அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என்று கூறிய அமைச்சர் டக்ளஸ் இன்னும் சளைக்காமல் வாக்குறுதிகளை இந்த தேர்தலிலும் அள்ளி வீசிக்கொண்டு இருப்பது தான்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அதிலிருந்து பிரிந்து போன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தமிழர் எம் முன் காணப்படும் சவால்களை முறியடிக்க வேண்டும் என்பதே அனைவரினதும் அவா. குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக தமிழர் தரப்பின் நியாமான கோரிக்கைகளான சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி போன்றவற்றை மழுங்கடிப்பதாக பிரிவினைகள் அமைந்து விடக்கூடாதென அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

அதுதான் அறுபதாண்டு கால உரிமைப் போரில் உயிர் நீத்த அனைவருக்கும் நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்க முடியும்.
read more